Tintern Abbey -Lines-Wordsworth...தழுவல் ...
ஐந்து ஆண்டுகள் போயின-ஐந்து கோடை களும்
ஐந்து நீண்ட குளிர்காலமும்-மீண்டும் நான் கேட்கிறேன்
இந்நதியின் ஓசையை-மலைகளின் ஊற்றுக்களிலிருந்து
புரண்டு ஓடுது-மெல்லிய உள்ளூர் இரைச்சலுடன்-மறுபடியும்
உயர்ந்த கூர்மைமிகு மலை உச்சிகளைப் பார்க்கிறேன்-
தனிமையின் காட்சிப்பொருளாய் விளங்கும் இவைகள்
இன்னும் கொடிய தனிமை உணர்வை மனதில் ஏற்படுத்துகின்றன,
இவ்வரிய படத்தோடு வானத்தின் மோனமும் புலப்படுகிறது,
மீண்டும் நான் ஓய்வெடுக்கும் தருணமிது -இங்கிருந்து
சிக்கமோர் மரங்களையும் கண்டு-அருகே காட்டு வெளியினில்
ஆங்காங்கே குடிசைகளை ,,ஆப்பிள் தோப்புக்களை-காய்த்துக்குலுங்கும்
கனிகளையும் -அனைத்தும் பச்சை வண்ணத்தில் கொத்துக் கொத்தாக
பார்க்கிறேன் -இவைகளோடு சுருள் சுருளாகப் புகையும் வருகின்றன-
எந்த நாடோடியின் எளிய இல்லத்திலிருந்தோ-சாமியாரின் குகையிலிருந்தோ
அவை வரலாம்-எந்த யோகி தனியே அங்கு சமாதியிலிருக்கிறாரோ!
இவ்வழகிய காட்சிகளை நான் பல ஆண்டுகள் கழித்தே கண்டாலும்
பெருநகரங்களில் தனி அறையினுள் -பார்வையற்றோனுக்கு கிடைத்த காட்சிபோல் அல்ல-
சந்தடிகளுக்கும் கூச்சல்களுக்கும் இடையே சலிப்புற்ற சமயங்களில் இனிமையான உணர்வுகளை
அக்காட்சிகள் கொடுத்தன-எனது ரத்தத்தில் ஊறி -இதயத்தில் உறைந்து என் தூய்மையான உள்ளத்தில்
நுழைகின்றன-அன்று கண்டது இன்றும் திரும்பிவந்து பேரமைதியைக் கொடுக்கும் விந்தைதான் என்னே!
நினைவில் கொள்ளமுடியா எண்ணங்கள்கூடத்தோன்றுகின்றன அப்பொழுது-
மேலும் ஒருநல்ல மனிதன் --அவனது சிறப்பான வாழ்க்கைத்தருணங்களில்
சிறியதாகவும் பெயரற்றதாகவும் மறக்கப்பட்டும் செய்த அன்புமும் இரக்கமும்
கொண்டு செய்த செயல்களால்- பாதிக்கப்படாமல் இருப்பதுபோல்தான்-- இயற்கையும்!
இன்னுமோர் இதற்குச் சற்றும் குறையாத மற்றுமோர் கொடை கூட இயற்கை கொடுத்தது-மேன்மையான ஆசிர்வதிக்கப்பட்ட நிலையில்தான்
புரிந்துகொள்ள இயலாத கனமான மர்மமாய் விளங்கும்
இவ்வுலக சுமையின் பாரம் குறைந்து -அந்த ஆழ்ந்தப்
பேரருள் நிலையில் -நம் கனவு மட்டுமே வழிநடத்தும்-
உடலின் மூச்சுக்காற்றும் ரத்தஓட்டமும்கூட நின்றுபோனது!-
அத்தகு நிலையில் நம் உடல் உறங்குவதுபோலவும்
நாம் உயிர்த்திருக்கும் ஆன்மாவாய் உருவானதுபோன்ற
பெரும் அனுபவத்தைப்பெற்றேன்-அனைத்தும் ஒன்றான
உள்காட்சிசக்தியும் ஆனேன்-பேரின்ப அந்நிலையில்
அனைத்துப்பொருட்களிலும் இயங்கும் உயிர்நிலையைக் கண்டேனே கண்டேனே!

Comments

Popular posts from this blog