நெஞ்சில் நிற்கும் காவியம் போல் சில கட்டிடங்களும் வாழ்க்கையில் நம்மோடு ஒன்றிவிடும்-அந்த வகையில்தான் நமது மதுரையின் காந்தி நினைவுக்கூடமும். .அந்தக் கம்பீரக் கட்டிடத்துக்கு அருகே வலப்புறம் ஓர் ஏழைகள் விடுதியைத் தாண்டி கால்நடை மருத்துவமனையினுள்இருந்த வீட்டில்தான் நாங்கள் மூன்று ஆண்டுகள் இருந்தோம்-எனது தந்தையார் அங்கெ மருத்துவர். நான் மூன்றாவது, மணி ஐந்தாவது படித்தான் தல்லாகுளம் பள்ளியில்.
எங்களுக்கு பொழுது பள்ளிக்கூட நேரம் தவிர இந்த காந்தி நினைவுக்கூடத்தில் தான்.காம்பௌண்ட் சுவரை ஏறிக்குதித்தே குழந்தைகள் பகுதி காந்தி நினைவக நூலகத்திற்குச் சென்று விடுவோம் -மணிக்கணக்கில் சிறுவர் புத்தகங்கள் -அம்புலிமாமா, கண்ணன் படித்து இன்புறுவோம்.மேலே காந்தியின் வாழ்க்கை வரலாறு வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படக் கண்காட்சியிலிருந்து இந்தியா உலக வரலாறு எல்லாம் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.காந்தி அடிகள் ஹே ராம் என்று கூவி உயிரை விடுகின்ற காட்சி அழக்கூட வைக்கும்.வெளியே நினைவகத்தினுள் அவரது ஆசிரமக்குடிசை மாதிரி அமைப்பில் அவர் பயன் படுத்திய தட்டு, காலணி,பாய் எல்லாம் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.பலமுறை பார்த்தும் அலுக்காத இடம் காந்தி நினைவிடம்.பெரியவர்களாக மாறி எங்கள் குழந்தைகளுக்கும் இவைகளைக்காட்டி மகிழ்ந்திருக்கிறோம்.
பின்னர் காந்தி நினைவக அரங்கினுள் நடந்த பல அருமையான இலக்கியக் கூட்டங்களில் கண்ணதாசன், ஜெயகாந்தன், சங்கராச்சாரியார் பேச்சுக்களைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்.உள்ளே ஓடி ஓடி விளையாடியுமிருக்கிறோம்.என்னைப்பொறுத்தவரை மதுரையில் அந்த இடம் மிகவும் பிடித்த இடம்.அப்போது -அந்த இடம் -முனிசிபல் காலனி என்று அழைக்கப்படும்.பத்தம்போதாம் நம்பர் -சென்ட்ரல் டு முனிசிபல் காலனி தான் கடைசி நம்பர்.வெள்ளிக்கலரில் டி .வி.எஸ் பஸ்கள் சிறப்பாக ஓடிய காலமது.கரும்பாலை என்ற ஏழை மக்கள் வாழ்ந்த இடம்.பச்சைப்பசேல் என்ற வயல் வெளிகள் தான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை-எதிரே தல்லாகுளம்-நீர் நிரம்பிய-ததும்பும் அலைகளோடு!அங்கே தெருவை இணைக்கும் கல்வேர்ட்டில் அமர்ந்து நாங்கள் பானைப்பொறியில் ஏறி மீன்கள் துள்ளி துள்ளி விழுவதை ரசித்துக்கொண்டிருப்போம்.கே கே நகருமில்லை -கோர்ட்டுமில்லை-வயல்வெளிகளில் வரப்புகளில் ஓடி வந்திருக்கிறோம் -பாம்பு,தவளைகளை பார்த்து மிரண்டு ஓடியிருக்கிறோம் .ஏரிக்கரையின் மீது நடந்துகொண்டே சென்று 'ஏரிக்கரையின் மேலே போறவளே பொன்மயிலே'என்று இரைந்து பாடிக்கொண்டே நடந்து வருவோம்-மதுரை-ஓ மதுரை (9 ).

Comments

Popular posts from this blog