ஒருமுறை மதுரைக்கு  கிழக்கே வரிச்சூர் என்ற கிராமத்திற்கு பள்ளி ஸ்கவுட்ஸ் கேம்ப் -க்காகச் சென்றிருந்தோம்.மாலை ஐந்தாகி விட்டது.சிறிய அழகிய கிராமம்.மெல்ல நடந்து ஒரு சிறிய குளத்தை அடைந்தோம்.நிறைய மரங்கள் சூழ்ந்து மறையும் சூரிய ஒளியில் குளத்துத் தண்ணீர் வர்ணஜாலங்களை வாரி இறைத்த காட்சியில் மனதை பறிகொடுத்தோம்.கூட்டுக்குத் திரும்பிய பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி ஆயிரக் கணக்கில் கூடி பல்வேறு ஒலி வகைகளை எழுப்பி எங்களால் வேறு எதன்மீதும் கவனம் வைக்க முடியாமல் மெய் மறந்து நின்றோம்.பல நாட்கள் அந்த சூழலும் பறவைகளின் இன்னிசையும் எங்கள் நெஞ்சில் பல காலம் பண் இசைத்துப் பரவசப் படுத்தியது.மதுரைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை இப்படித்தான் சிற்றூர்களுக்கும்.வைகை அணைக்கட்டுக்கும் ,கும்பக்கரைக்கும் எக்ஸ்கர்ஷன்  அழைத்துச் செல்வார்கள்.கொஞ்சம் பெரிய மாணவர்கள் ஆனால் கொடைக்கானல் என்ற சொர்க்கபுரியே கூட்டிச்செல்வர்.குற்றாலம், கன்னியாகுமாரியும்அப்படித்தான்.எழுபதுக்களுக்குப்பிறகே பெங்களூரு, மைசூர்,திருவநந்தபுரம் ..எல்லாம் பொருளாதார அடிப்படையை வைத்தே!இன்றைக்கு எல்லோரும் எல்லா ஊர்களும் சென்று  வருகின்றனர். அமெரிக்காவும் இங்கிலாந்தும் அண்டை நாடுகளாகிவிட்டன! கடல் பார்த்திராத சென்னைக்கே செல்லாத ரொம்பப் பேர்கள் எங்கள் பள்ளித்தோழர்களாயிருந்தனர்.பத்துரூபாய்க்கு மதுரையை ஒரு ரவுண்டு சுற்றிக் காண்பிக்கும் -சிறுவர்கட்கு மட்டும்-டகோட்டா விமான வசதி இருந்ததை நம்புவீர்களா?தமிழ் நூல்களெல்லாம் படிக்கத்துவங்கிய பருவம் அது. குறிப்பாக சங்கர்லால் துப்பறிகிறார் -தமிழ்வாணன்  எழுதியது நிரம்பப்  பிடிக்கும்.அதுபோன்ற துப்பறியும் கதையும்  கையுமாகக் காட்சி அளித்தால் வீட்டில் எத்தனை எதிர்ப்பு வரும்?
வருவதைச் சந்திப்பதுதான் வாழ்க்கை! வாழ்க்கையின் த்ரில் ஆசைப்படுவதிலும்-அதை அடைவதிலும் -மேன் மேலும் வாழ்ந்துகொண்டு இருப்பதிலும்தான்.பிச்சைமுத்துக் கோன் என்றொரு பாத்திரம்-மதுரைக்கு அருகே உள்ள கிராமத்தில் வாழ்த்து வருவார்-உற்றார் உறவினருடன் இணக்கமாகவும்-நிலத்தில் உழுது பயிர் செய்தும்- எல்லாம் நன்றாகப் போனால் கதை ஏது? சிறிது சிறிதாகப் பிரச்சினைகள் வந்து வந்து குடும்பம் பிரிகிறது-ஆளுக்கு ஒரு மூலையில்-அனைத்தையும் இழந்து-பின்னர் பலப்பல சோதனைகள் தாண்டி-மதுரை மாவட்டத்தையே கதையில் காண்பித்துவிடுவார்-கதாசிரியர்-எப்படி சுபமாக முடியும் தெரியுமோ அந்த நாவல்? சில புத்தகங்கள் இப்படியாக வீட்டில் பலமுறை உலா வரும்-சலிக்காமல் நாமும் அதை படித்து இன்புறுவோம்-துன்புறுவோம்-அதில்வருவோரைப்பற்றி பேசுவோம்-அவர்களுக்காகப் பரிந்திடுவோம்.பி எஸ்.ராமையாவின் நாவல் அது என்று எண்ணுகிறேன்-கொஞ்ச மாதங்களில் புத்தகமே தார் தார் ஆகப் பிய்ந்து போனது-படித்துப் படித்துக் கிழித்துவிட்டோம்!
அதுபோலவே தா. நா.குமாரசாமியின் வீட்டுப்புறா ,சாண்டில்யனின் யவன ராணி,கல்கியின் பொன்னியின் செல்வன் , அலை ஓசை, லக்ஷ்மியின் பெண்மனம்,தேவனின் சி ஐ டி சந்துரு, துப்பறியும் சாம்பு,மிஸ்டர் வேதாந்தம், எஸ் ஏ பி யின் காதலெனும் தீவினிலே,மணியனின் சொல்லத்தான் நினைக்கிறேன் -இவைகள் போன்று பலவும் எனது சகோதர சகோதரியாருடன் மதுரையில்தான் படித்து வளர்ந்தோம்.ஷெனாய்நகர் கிளை நூலகம் பெரிதும் உதவியது. கிட்டத்தட்ட எல்லோர் வீட்டிலும் நூல்கள் இருந்தன-ஒருவர்க்கொருவர் படித்து மகிழ நட்பும் வளர்ந்தது.
 மதுரையில் படித்ததைவிடவும், விளையாடியதும் கதைப்புத்தகம் படித்ததும் மிக அதிகம்தான்.அதற்கேற்றாற்போல் ஆங்கில இலக்கியம் எடுத்தது வசதியாய்ப் போயிற்று.அனால் தமிழில் புரிந்துகொண்ட வாழ்க்கையும்-ஆங்கில இலக்கியத்தின்மூலம் புரிந்துகொண்ட அந்நிய மரபுகளும் நம்மைச் சற்றே அறியாமையில் ஆழ்த்திவிடும் அபாயம் இருந்தது-இன்னும் இருக்கிறது.கிறித்தவப் பள்ளி,கல்லூரிகளில் ஏற்பட்ட நட்புகளும் பைபிளும் அறியாமையைச் சற்றே கட்டுக்குள் வைத்தது.'டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்திலிருந்து கிறிஸ்துமஸ் பாடல்கள் ஒலிக்கத்துவங்கும்-"எல்லாம் ஏசுவே -எனக்கெல்லாம் ஏசுவே" பாடல்களை உச்சரிக்காத உதடுகள் இல்லை.-அதுபோல்' மிஸ்ஸியம்மா வில் வரும் சாவித்ரி பாடும் " என்னை ஆளும் மேரி மாதா " வும் மிகவும் பாப்புலர்.ரஞ்சித் (இப்போது பிரபல ஓவியர்)என்ற நண்பனோடு சேர்த்துக்கொண்டு அவன் கிட்டாரில்  பல பாடல்களைப்  பாடியும் கேக் வெட்டி கிறிஸ்த்மஸ் கொண்டாடுவதும் மதுரையில்  கிடைத்த பெரும் பேறே.எனக்கே ஏசி ஹை ஸ்கூலில் எட்டாவதுபடிக்கயில் தேவதூதனாக மேடையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை எப்படி மறப்பேன்?மதுரையில் வளரும் ஒவ்வொருவருக்கும் அனைத்து
மதங்களையும் போற்றி வாழும் பண்பே இருப்பது மிக இயல்பான ஒன்று.சர்ச்சுக்கும்  செல்வோம்-மசூதியிலும்  மந்திரிப்போம்--பாவ மன்னிப்பு சிவாஜியும் -எம்ஜியார் முஸ்லிமாக ' மேரா நாம் அப்துல் ரஹ்மானும் 'எங்களுக்கு வழிகாட்டிகள்!



Comments

Popular posts from this blog