மதுரை ஓ மதுரை! 4 மயக்கும் மதுரையும். சினிமாக்களும்!
மதுரையில் நான் என்னுடைய ஆறு வயதிலிருந்து -1957இலிருந்து 2000 வரை வளர்ந்தேன், பயின்றேன்,-வாழ்க்கையின் வளங்களை உணர்ந்தேன்.'போர்க்குணம்' என்னோடு பிறந்தது-சிறு வயதில் மஹாபாரதக் கதையில் எனக்குப் பிடித்தவர்- கண்ணனைத் தவிர -பீமன் தான்.அப்போதெல்லாம் மதுரையில் பத்து பதினைந்து தியேட்டர்கள்தான் இருந்தன.சினிமா பார்க்கும் பழக்கம் நிறைய குடும்பங்களில் இல்லை.நான் ஆறாவது படிக்கும் போது 'அப்போதைய தினமணியில் 'உத்தமபுத்திரன்' பார்த்து மகிழ்ந்தேன்!சற்று இடைவெளிக்குப் பிறகு 'காதலிக்க நேரமில்லை' சென்ட்ரலில் பார்த்துவிட்டு அசந்துவிட்டேன்-காதலும் புரியாது கத்தரிக்காயும் புரியாத பருவம் அது. பிறகு நினைவுக்கு வருகிறது 'அன்பே வா' தான்--சிந்தாமணியில் அண்ணன் மணியோடு பார்த்துவிட்டு மயங்கிப்போனேன்.
இதெல்லாம் நடப்பது ஏசி ஹை ஸ்கூலில் படிக்கும்போது., பாட்டுக்கள் கேட்டுக்கேட்டு வளர்த்த காலம் அது.எம்ஜியார் மற்றும் சிவாஜி , டி எம் எஸ் பாடல்கள் மனதை ஊடுருவி நாளெல்லாம் நெஞ்சில் உலவிவந்து பரவசம் அடையும் காலமது. ஏதாவது பாட்டை இரைந்து நானும் மணியும் பாடிப்பாடி அண்ணன்மார்களிடம் திட்டுக்கள் வாங்கிய சமயம்.வீட்டுக்கு எதிரே அமெரிக்கன் கல்லூரி மைதானத்துக்கு அருகில் உள்ள மாணவர் விடுதிகளில் விடுமுறையைக கொண்டாடும் விதமே .நாளெல்லாம் பாட்டுக்கள் கேட்பது தான்-அப்பப்பா எதனை தேன்சுவைப் பாட்டுக்கள்!பொருளெல்லாம் பெரிதாக விளங்காது..ஒருவித கிளர்ச்சியை அவை கொடுத்தன -எப்போதும் கிரிக்கெட் -முடியும்போதெல்லாம் சினிமா
,நான் பார்த்த படங்களின் லிஸ்டே கொடுக்கிறேன் -எத்தகு ரசனையை நாங்கள் பெற்றிருப்போம் என்று நீங்கள் அறியலாம்(!)
.கல்பனாவில் அதே கண்கள், தேவியில் திருவிளையாடல் ,சென்ட்ரலில் எங்கவீட்டுப்பிள்ளை-நெஞ்சிருக்கும்வரை, ஆயிரத்தில் ஒருவன்,நியூ சினிமாவில் திருவருட் செல்வர்,கந்தன் கருணை,சிந்தாமணியில் எதிர்நீச்சல்,மேஜர் சந்திரகாந்த், தங்கம் தியேட்டரில் சந்திரோதயம், பறக்கும் பாவை, அலங்காரில் கிங் காங்- இதெல்லாம் ஒரு சாம்பிள் தான் -
siனிமா பார்க்கவரும் மதுரைவாசிகள் உணர்ச்சி வயப்படுவர் பாத்திரங்களுடன் ஒன்றி -MGR படமென்றால் ஒரே களேபரம் தான்..ஏதோ விற்று வரும் பையன்கள்கூட MGR ஐப் பார்த்தவுடன் அடையும் பரவசம் வார்த்தைகளில் அடங்கா.படம் ஒன்று கொஞ்சம் 'போர்' அடித்தால்-சிலர் 'பருத்திப்பால்' என்று ஏன் கத்துவார்கள் என்பது இன்றுவரை புதிர் தான்.நியூ சினிமாவின் திராக்ஷ ரசம் இன்னும் நாவில் நிற்கும்.மிகச் சிறிய இம்பீரியல் தியேட்டரில் ஜெயராமனின் நண்பன் புகழேந்திக்கு அருகில் சினிமா பார்த்தவர் MGR சண்டைக்காட்சி வந்தபோது தனது பீடியை புகழேந்தி தொடையில் வைத்து அணைத்ததை இன்றும் நினைவுறுத்தி மகிழ்வோம்.எக்ஸாம் சமயம் மட்டும் -மூச்- சினிமா பார்க்காத நல்ல பிள்ளைகள்.பல தாய்மார்கள் அழுதுகொண்டே தியேட்டர் ஐ விட்டு வரும் நிலை எப்போதும் நடப்பது.சிவாஜிக்கு ஆலயமணிக்காக பெரிய கட்அவுட் திருப்பரங்குன்றம் மெயின் ரோடில் வைத்ததும் ,எம்ஜியாருக்கு குடியிருந்த கோவிலுக்காக பிரம்மாண்ட கட் அவுட் டவுன்ஹால் சாலையைப் பார்த்துக்கொண்டு ரீகல் தியேட்டர் முன் வைத்ததும் நெஞ்சை விட்டு அகலாது.
பள்ளியில் ஆசிரியர் -பெற்றோர் தினத்தில் பாவமன்னிப்பு படம் போட்டார்கள் -பார்த்து வரும்போது ராஜாஜி ஆஸ்பத்திரியில் -சரஸ்வதி பள்ளிக்கூடம் இடிந்து விழுந்ததில் பலியான சிறார்கள் கொண்டுவந்தார்கள்-அய்யகோ எத்தகையோ சோகத்தை நாங்கள் உணர்ந்தோம்-அதுபோலவே பாகப்பிரிவினை பார்த்துவிட்டு சிவாஜிக்காக கண்ணீர் விட்ட அப்பாவித்தனம் நினைவில் நிழலாடும்.நான் சொல்லவருவது மதுரைக்காரர்களுக்கு சினிமா மோகம் அதிகம்தான்-இன்னும் சொல்லப்போனால் மதுரையை வைத்தே சினிமா ஓடுமா ஓடாதா என்று சொல்லிவிடுவார்கள் -.
பரமேஸ்வரியில், ரீகலில்  பார்த்த ஆங்கிலப் படங்கள் ஏராளம்-பின்னாளில்தான் தங்க ரீகல் ஆயிற்று.
அந்தக்காலம் என நான் குறிப்பிடுவது- அறுபது களில்--நாங்கள் இருந்தது ஷெனாய்நகர் மெயின் ரோட்டில் - தல்லாகுளமும் ,மாரியம்மன் தெப்பக்குளமும் வற்றாமலிருக்கும்! இந்தப்பக்கம்-புதூர் -அந்தப்பக்கம் தத்தனேரி,கிழக்கு பக்கம் சாத்தமங்கலம்-மேற்கே பழங்காநத்தம் தான் எல்லைகள் -அரசரடி யெல்லாம் ஒரு கோடியில்.அழகான நீர்நிலைகளும் சோலைகளும் வயல்வெளிகளும் மதுரையை சூழ்ந்து இருக்கும்.சினிமாக்களில் அன்பும் பாசமும் வீரமும் கருணையும் பக்தியும் நிறைந்து இருக்கும் -பாடல்களில் காட்ச்சி அமைப்பு பொருந்தி வரும்-பலருக்கு வாழ்க்கை சினிமாவிலிருந்துதான் தொடங்கும்.தமுக்கம் மைதானத்தில் சித்திரை திருவிழா நடக்கையில் மாலை வேளைகளில் அங்கெ உலவி பாடல்கள் பலவும் கேட்டு மகிழ்வது மண்ணின் மரபு!அதுபோலவே திரைப்பாடல்கள் -dialogues-ஒலிநாடாக்கள்-பராசக்தி முதல் திருவிளையாடல் வரை மதுரையின் கோவில்களிலும் ரசிகர் மன்ற பாசறைகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கும்-எம்ஜியாருக்கு தங்க வாள் கொடுத்து அழகு பார்த்ததும் மதுரையில்தான்-மணியும் நானும் கூட்டத்தில் சிக்கி -அதைப்பார்த்து ரசித்ததும்-வீட்டில் திட்டு வாங்கியதும் மறக்கமுடியுமா?

Comments

Popular posts from this blog