மதுரை ஓ மதுரை.-3 --கல்லூரியில் பயின்றதிலே ...
அமெரிக்கன் கல்லூரியின் பெயரிலேயே அமெரிக்கா இருப்பதனால் நாங்கள் பயின்ற காலத்தில் (1967 -'71 )மெய்யாகவே சுதந்தரத்தோடும் சுயமரியாதையுடனும் கல்வி பயின்றோம்.இப்போதெல்லாம்
கேள்விப்படுகின்ற கல்விச்சாலை இல்லை அது.ஆசிரியர்கள் மிகுந்த நட்புடனும் அன்புடனும் மாணவர்களுடன் பழகிய பொற்காலம் அது.'ஜென்டில்மேன்' என்றுதான் ஆசிரியர்கள் மாணவரை விளித்த நேரமது.முதல்நாள் அன்றே பியுசி சேர்ந்த மாணவர்கட்கு 'அறிமுக விழா.' ஒவ்வொரு துறையாக சுற்றிக்காண்பித்து -மிகப்பெரிய நூலகத்தையும் காண்பித்து -ஆசிரியர்களுடன் பழகவைத்து இனிதே தொடங்கும் கல்லூரி நாட்கள்.அழகான சோலைகள் போன்ற அமைப்புகள் நடுவே வானுயர்ந்த வகுப்பறைகள் ! சிறிய சர்ச் -பெரிய காண்டா மணிக்கோபுரம், பறந்து விரிந்த மைதானம் -அடடா சொற்களில்லைநயமுற எம் கல்லூரியை விவரிப்பதுற்கு!பிரம்மாண்டமான மெயின் ஹால் -சிவாஜி ஆரம்பித்த ஆடிட்டோரியம் ,நிழல் தரு நெடிய மரங்கள் -சில்லென்ற காற்று -இங்கே தான் ஆங்கில இலக்கியம் படித்தேன் மூன்று ஆண்டுகள் -கூடவே எனது ஆருயிர் சகோதரன் சிவாவும்..ஏசி ஹை ஸ்கூலில் இருந்தே தொடரும் ஜெயராம், ஞானவேல், சசிதரன்,பாலா,சண்முகம்,சீனுவாசன் .நாளெல்லாம் வகுப்புகள் -மாலைகளில் கிரிக்கட்டு..மெட்ராஸ் சிட்டி ஹோட்டல் பரோட்டா அல்லது அலங்கார் ஓட்டலில் பூரி--மறக்கமுடியாத கோரிப்பாளையத்துக் கடை -சுப்ரீமில் சூப்பர் டீ!இலக்கியக்கழகமென்ன ,ymca கூட்டங்கள் என்ன, நடிப்பென்ன நாடகமென்ன,கட் அடித்துவிட்டு சைக்கிளில் போய்ப்பார்த்துவரும் ஜேம்ஸ்பாண்டு படங்களென்ன வசந்தன் நெடுமாறன் பாப்பையா போன்ற ஜாம்பவான்கள் வகுப்புகளின் அலப்பறை என்ன,
கல்லூரியில் நடத்தப்பட்ட விழாக்களின் சிறப்பு என்ன, மரத்தடி மாமுனிக்களின் கூத்துதான் என்ன -அதுவும் கடைசி நாட்களில் நண்பன் பாரதிராஜா குதிரையிலேயே கல்லூரியை வலம் வந்ததும் -ராஜசேகரின் பாட்டும்,ரஞ்சித்தின் கிட்டாரும் நிகழ்த்திய அற்புதமும் மறக்கமுடியுமா?கடைசி நாளில் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து விவிலிய இசைக்கேற்ப நெஞ்சத்தில் புரண்டு ஓடும் உணர்ச்சிகள் என்றென்றும் நினைவில் வாழும்.எல்லோருக்கும் எல்லா கல்லூரிகளிலும் இத்தகைய அனுபவங்கள் இருந்திருக்கும் --மதுரையும் அமெரிக்கன் கல்லூரியும் ஒரு குறியீடுதான்.

Comments

Popular posts from this blog