Madurai O Madurai -8. A.C high school Days...
எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே'-கோரிப்பாளையம் வழியாக ,தமுக்கம் தாண்டி, கருப்பண சாமி கோயில் அருகே இந்தப் பாட்டையும் கேட்டுக்கொண்டு நானும் எனது அண்ணனும் ஏசி ஹைஸ்கூல் உள்ளே நுழைவோம்-லேட் ஆகப்போனதே கிடையாது .பலநாட்கள் காலை வகுப்புகளை முடித்துவீட்டு -ஷெனாய்நகர் போய் மதிய உணவு சாப்பிட்டு வந்துவிடுவோம்.காலை அசெம்பிளி யின் போது 'நியூஸ்' எல்லாம்கூட நானும் மணியும் வாசித்திருக்கிறோம்.ஒருமுறை ஹெச்,எம் கட்டுரைப்போட்டி முடிவு ஒன்றை அறிவிக்கிறார்-ரெஜினோல்ட் விக்டர் முதல் பரிசு..சிவாவுக்கு இரண்டாம் பரிசு!-'எங்கள் ஊர்' என்று கும்பகோணம் பற்றி அவன் எழுதியதற்கு! ரெஜி பின்னாளில் மணிக்கு சகலையானார்!
எங்கள் பள்ளி மாடல் லோக்சபா ,மாடல் யு என் ஓ எல்லாம் நடத்தும் .தலைசிறந்த எழுத்தாளர்களை கூட்டிவந்து உரை ஆற்ற வைப்பர். அகிலன், நா. பார்த்தசாரதி, எல்லோரையும் இப்படித் தான் சந்தித்திருக்கிறோம்
.பண்ட் ட்ராமா ஒன்று -சாணக்கிய சபதம்' என்றபெயரில் தமுக்கம் கலையரங்கில் போடப்பட்டது-இயக்கம் எங்கள் உள்ளம் கவர் அரசு ஆசிரியர்.எனக்குப்பெருமை-ஒரு நல்ல ரோலில் வருவேன் என்று-ஆனால் நாடக நாள் நெருங்க என்ன நிர்பந்தத்தினாலோ எனக்கு ஒரு பெண் வேடம் -அதுவும் சாணக்கியரின் சீடருடன் ஓரிரண்டு காட்சிகளில் வந்து போனேன்-பாவம் எனது அம்மா-அப்பா.நான் நடித்ததைப் பார்க்கவேறு மெனெக்கட்டு வந்திருந்தனர்."நாடகம் அன்று நான் மிகவும் டென்ஸ் ஆக இருப்பேன்-என்னை எவரும் தொந்தரவு செய்யக்கூடாது"என்று டைரக்டர் சொல்லியிருந்தார் -அதைமீறி எனது நண்பன் அவரிடம் ஏதோ கேட்கப்போய் அரசுஅய்யா அவர்கள் அவனை வெளுவெளு என்று வெளுத்துவிட்டார்!
ஏப்ரல் ஒன்றாந்தேதி வந்தால் குஷி தான்.இங்க் பென் தானே அப்போது.உருளைக்கிழங்கில் இங்க். வைத்து ஏ எப் என்று கட் செய்து எல்லார் முதுகிலும் பொரிப்பதுதான் அன்றய வீர விளையாட்டு!ஒருமுறை ஓரு ஆசிரியர் மகன் மீது இதை நான் செய்து மாட்டிக் கொள்ள -விட்டாரே ஓர் அறை-கன்னம் வீங்கியது-தவறு செய்து அடி வாங்கினால் -நியாயத்திற்கு கட்டுப்படுவேன்-ஆனால் கணக்கு வாத்யார் ஒருமுறை செய்யாத தப்புக்கு அடித்தவுடன் அந்த வேதனையில் அப்பாவைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டேன்.அப்பா அப்போது மாவட்ட கால்நடை அதிகாரி-அவரோடு ஜீப்பில் பெருமையாக வந்து ஹெச் எம் ஐயும் அழைத்துக்கொண்டு வகுப்புக்கு சென்று-அந்த ஆசிரியரை மிரட்டி விட்டுத்தான் சமாதானமானேன்.
எப்போதும் ஜாலியாகவே இருந்த நாட்கள் அவை-மனதில் இனம் தெரியா மகிழ்ச்சி சதா குடிகொண்டிருக்கும்.ஏதாவது பாட்டை எப்போதும் மனம் பாடிக்கொண்டுமிருக்கும்.ஒருமுறை ஸ்போர்ட்ஸ் டே ..கொஞ்சம்தூரம் தள்ளி ரிசர்வ் மைதானத்தில்-வெகுதூரம் நடக்கவேண்டும்-நான்,மணி நண்பர்கள் எல்லாம் பாடிக்கொண்டே ஓடையில் இளைப்பாறிக்கொண்டே போனோம்.பஸ் எல்லாம் எப்போதாவதுதான்.மதுரை ஜனத்தொகையே-இரண்டு லட்சம் தான்.சாலையின் இரு மருங்கிலும் நெடிய மரங்களும் -செடி கொடிகளும் அழகு படுத்தி ஒருவித நறுமணம் எங்கும் பரவி இருக்கும்-அம்மா கொடுத்த இருபத்து ஐந்து பைசா-அந்த அறுபத்திரண்டாம் வருடம் எவ்வளவு தாராளமாக செலவழிக்க வைத்தது.(தொடரும்...)

Comments

Popular posts from this blog