Madurai O madurai-7
எழுதுவது தான் என் வேலை-யார் படித்தால் என்ன-படிக்காவிட்டால் என்ன என்றெல்லாம் நினைத்து எழுதுபவன் பெரிய எழுத்தாளர்..பத்திரிக்கையில் எழுதுகிறவன் தான் எழுத்தாளர் என்று ரொம்ப பேர் நினைக்கிஎறோம்-'புகழ்' இல்லாமல் வெறும் எண்ணங்கள் சொற்களாக இருக்கமுடியாது என்று முடிவு கட்டுகிறோம்.விருப்பும் வெறுப்பும் நம்மை ரொம்பவே வழி நடத்துகின்றன.தவறில்லை.
எழுத எழுத எல்லோரிடமும் தொடர்பு இருக்கிறதாக ஒரு பாவனை வருகிறது-அதனால் தொடர்ந்து எழுதுகிறோம்--யார் படிக்காவிடினும்.
மதுரையின் தமிழ்தான் தமிழ் என்று ரொம்பநாள் பெருமைப்பட்டேன்-பிறகே மெட்ராஸ் தமிழும் தமிழ்தான் என்று புரிந்து கொண்டேன்-'எல்லா மொழியும் எச்சிலில் பிறந்த கொச்சை' என்று ஜேகே சொன்னது நினைவுக்கு வரும்-அதிரடியாகப் பேசத்தெரியாமல் வருந்தி இருக்கிறேன்-இப்போது பேசாமல் இருப்பதை மிக சௌகர்யமாக எடுத்துக்கொள்கிறேன்.
மதுரையில் பெயர்கள் வைத்திருக்கும் பாங்கு வேடிக்கையாக இருக்கும்-மண்டையன் ஆசாரி தெருவும் உண்டு-சுண்ணாம்புக்கரத்தெருவும் உண்டு.சித்திரக்காரத்தெரு-என்ன அழகான பெயர். மதிச்சியம் என்றால் என்ன? நரிமேடு-தத்தனேரி,ஆழவார் புரம்,பழங்காநத்தம்,கரிமேடு, இன்னும் பல பெயர்களுக்கு 'மூலம்'-நிச்சயம் இருக்கும்-காரணம் இல்லாமல் போகாது எதற்கும்-கொஞ்சம் ஆராய்ந்தால் விடை கிடைக்கும்.கோவில், குளங்களை ஒட்டி பெயர்கள் நிறைய வந்துவிடும்-தல்லாகுளம். சொக்கிகுளம்,தெப்பக்குளம்-.அப்படி . இடத்திற்கு நல்லன செய்ததற்கு எவர் பெயராவது கூட சூட்டப்படும்-அழகப்பன் நகர்-ஷெனாய்நகர்-டிவிஎஸ் நகர்-இப்படி.ஆனால் அவனியாபுரம் , வண்டியூர், ஆரப்பாளையம்,அரசரடி,பொன்னகரம் என்றபெயர்கள் எப்படி வந்தன? செல்லத்தம்மன் கோவில்.வக்கீல் புதுத்தெரு.நாய்க்கர் தெரு,தளவாய் தெரு, தானப்பன் தெரு, திண்டுக்கல் தெரு ,விளக்குத்தூண் நம்மால் புரிந்துகொள்ளமுடியும்- அதுபோலவே பொன்னி நகர்,கோரிப்பாளையம், ஜெய்ஹிந்த் நகர், சதாசிவம் நகர் புரிகிறது-முனிச்சாலை ,நவ்பத்கானா,மஞ்சனக்காரத்தெரு,அனுப்பானடி எல்லாம் எப்படி வந்ததுயானைக்கல், சிம்மக்கல்-அழகு! திடீர்நகர் , கரும்பாலை,கூடல் நகர்-ஓகே.ஆனால் மாப்பாளையம் ?ஒப்பணக்காரத்தெரு -புரிகிறது. குருவிக்காரன் தெரு எப்படி?புட்டுத்தோப்பு சரி-காக்காத்தோப்பு?மாட்டுத்தாவணி சரி--விளாச்சேரி? மூட்டா தோட்டம் சரி-வசந்த நகர்?ஆண்டாள்புரம் , பேச்சியம்மன் படித்துறை சரி-அதென்ன கோச்சடை?
இதெல்லாம் வீண் வேலை தான்-ஆனால் வம்பு ஏதேனும் செய்யாமல் பொழுது போகவேண்டுமே? பணிக்கு செல்லும்போது வாழ்க்கையின் அர்த்தம் புரியும் ..ஓய்வு பெற்றபின் தான் கொஞ்சம் கொஞ்சமாக தனிமையும் தனிமையின் சாரமும் தெரியும் -விரும்புவோர் விவாதிக்கலாம்-எனக்கோ அரசியலில் நாட்டமில்லை-ஆன்மிகமும் எல்லோரிடம் பேசமுடியாது-அதனால்தான் நண்பன் ஜெயராம் சொன்னதுபோல் 'அசை' போட்டுப் பார்க்கிறேன்..-மாடு அல்லவே -அதனால் ஒரு ஊரையும் பெயரையும் வைத்துக்கொண்டேன்-கதைக்கிறேன் --ஆமாம் மதுரை என்றால் இனிமையா?
Comments
Post a Comment