பக்தி மணம் மிகு மதுரை என்றென்றும் கலைகளையும் போற்றியே வளர்த்தது.அழகு தமிழுக்கு ஈராயிரம் ஆண்டுகட்குமுன்னரே சங்கம் வைத்து அதில் இறையனார் வந்து பாடிய மரபும் இருந்தது.சங்கர தாஸ் ஸ்வாமிகள் போன்றோர் நாடகக் கலைக்கு வித்திட்ட சமீபத்திய சரித்திர நிகழ்வுகளும் உண்டு.மதுரை மணி, மதுரை சோமு -பட்டி தொட்டி எல்லாம் தமிழைக் கொண்டுசென்ற MSS., டி எம் எஸ் ,சேஷகோபால் போன்ற இசை மேதைகள் மூலம் இசையை போற்றி பேணி வளர்த்தும் மதுரை தான்.கட்டிடக்கலைக்கு ஒரு மிக அபூர்வ மஹாலைக் கொடுத்ததும் மதுரை தான்.
இந்தியாவுக்கு ஓர் தாஜ் மஹால் எனில் தமிழகத்துக்கு ஓர் திருமலை நாய்க்கர் மஹால்.அதன் அழகும், பெருமையும், நேர்த்தியும் நாளெல்லாம் பேசிக்கொண்டே போகலாம்.மதுரையின் மய்யப் பகுதியில் மீனட்சிகோயிலுக்கு அருகே இவ்வரிய அரண்மனை அமைந்துள்ளது.இதுபற்றிய வரலாற்று குறிப்புகள் கொடுக்க எழுதவில்லை-எனக்குத் தெரிந்த மதுரையில் என் உணர்ச்சிக்கும் உணர்வுகட்கும் கருப்பொருளாய் விளங்கிவரும் இடங்களின் கவித்துவத்தை வெளிக்கொணர்வதே எனது நோக்கம்.மன்னர் திருமலையின் அழகியல் சிந்தனையின் அற்புத வெளிப்பாடாகவே இம்மாபெரும் கட்டிடத்தைப் பார்க்கிறேன்.மிகப் பெரிய தூண்கள் ,விசாலமான வெளி மற்றும் உள் அறைகளின் கம்பீரம் கண்டோர் மனதையும் கருத்தையும் கவர்கிறது.பாமர மக்களும் பரவசப் படும் அமைப்பு மஹாலின் கட்டமைப்பு.
சினிமா நிஜமாகும் மதிப்பீடு அங்கு வருகை புரியும் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிறது.தாஜ்மஹாலின் முன் நாம் சிறியவனாகிறோம்- மஹாலினுள் நாம் நெருங்கிய அவதார உணர்வு அடைகிறோம்-ஒருவேளை தாஜ் ஒரு கல்லறை -இது ஓர் மன்னனின் இனிய வாழ்க்கையை பிரதிபலிக்கும் பிரம்மாண்ட இல்லம் என்பதாலோ.மன்னன் திருமலையின் ஆலயத் திருப்பணிகள் மீனாட்சி மற்றும் தெப்பக்குளம், புது மண்டபம் என்று மதுரை பூரா அவரது கைவண்ணம் வாரிக் கிடப்பதும் மஹால் மீது நமக்கு ஏற்படும் மரியாதையும் ஒரு காரணமோ.எது எப்படியோ- மதுரைக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள்.எப்போதெல்லாம் மனம் ஏங்கி அகத்தே காணும் அழகியல் இன்பம் பருக ஆசைப்படுகிறதோ அப்போதெல்லாம் மஹாலுக்குச் சென்று அங்கெ அமர்ந்து ஆனந்திக்கலாம்-பத்தே ரூபாய் செலவில்.அதனாலோ என்னவோ நிறைய காதலர்கள் இங்கே கண்ணில் படுகின்றனர்.ஏராளமான டூரிஸ்டுகள் வருகைபுரியும் இடமாயும் உள்ளது.அரசர்கள் அரண்மனை இந்தியா முழுவதும் இருந்திருக்க வேண்டுமே?ஆனால் என்னவோ சில இடங்களில் தான் காண்கிறோம்-மைசூர், ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் காணும் அரண்மனைகளை மதுரையிலும் பார்ப்பது மகிழ்ச்சி அன்றோ.
Madurai O madurai (17).

Comments

Popular posts from this blog