மதுரைக்கு நேருஜி வந்ததும் நாங்கள் அவரை அமெரிக்கன் கல்லூரி அருகே ' தரிசித்ததும்' இப்போதும் மகிழ்ச்சி தரும் அனுபவம்.காந்திஜி, நேருஜி. காமராஜர் எல்லாம் எங்களுக்கு வணக்கத்துக்குரியவர்கள் .அவர்கள் நினைப்பே கூட பெருமையாய் இருக்கும்.நேருஜி அவர்கள் காங்கிரஸ் மாநாட்டுக்கு வருகை தந்தார்.எனது தந்தையர் மற்றும் சகோதர, சகோதரிகளுடன் அவரைப் பார்க்க என் எம் பி பேக்கரிக்கு எதிர்ப்புறம் கடுமையான வெய்யிலில் காத்திருந்தோம் . அதோ அவர்-திறந்த கார் ஒன்றில்-பலத்த கரகோஷத்துக்குக்கிடையே-மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஒட-நல்ல ரோஜா நிறத்தில் சுந்தர புருஷராகத் தோன்றினார்.அப்போது எனது தந்தையர்-ச்சாச்சா நேருஜிக்கி-என்று முழக்கமிட
-மக்கள் அனைவரும் ஜெ! என்றே குரல் கொடுக்க - மாபெரும் தலைவர் தனது கழுத்தில் போடப்பட்ட மாலையை எடுத்து என் தந்தையார்மேல் வீசியெறிந்து தன அன்பைக் காட்டிட-மெய் சிலிர்த்தோம் அனைவரும்.
இதுநடந்து சில வருடங்கள் கழித்து பிரதமர் இந்திரா காந்தி அவர்கள்,ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுடன்-இருவரும் பின்னிருக்கையில்-காமராஜர் அவர்கள் முன்னிருக்கையில் பனகல் வீதியில் எங்கள் வீட்டுமுன் ஒரு காரில்கடந்து பால்பண்ணையைத் திறந்துவைக்க சென்றபொழுது, என்னுடைய தந்தையாரைப் பார்த்தவுடன் பெருந்தலைவர் அவர்கள் வணக்கம் தெரிவித்ததும் மறக்கமுடியாது.மாவட்ட கால்நடை அதிகாரியாக ராமநாதபுரத்தில் என் தந்தையார் பணி புரிகையில்-ராமேஸ்வரத்தில் எதோ தொத்துவியாதியில் கொத்து கொத்தாக மாடுகள் இறந்துபோகும் சமயத்தில் காலநேரமின்றி தந்தை உழைத்தததை ஒரு சமயம் அதிகாரிகள் கூட்டத்தில் முதல்வர் பாராட்டியதாகத் தந்தை தெரிவித்தார்.எனது தந்தையாரைப் போல் பல தந்தைமார்களும் அந்தக் காலத்தில் அரசு அதிகாரிகளாக மிகத் திறமையாக நாட்டுக்கு உழைத்தனர்.மாவட்ட வளர்ச்சிக்குழு கூட்டங்களுக்கு முதலமைச்சர் பங்கேற்று அதிகாரிகளை ஊக்குவிப்பார்.அங்கே போய் ஆட்சித்தலைவர் நாற்காலிகளில் உட்காரமாட்டார். நிர்வாகம் நன்கு இருக்க இவ்வாறெல்லாம் கடுமையாக முதல்வரே உழைத்தார்.செம்மையான மனது படைத்தக் காமராஜர் , சில மாதங்கள் கழித்து ராஜாஜி அரசு மருத்துவமனையின் குழந்தைப்பேறு -பிரசவக் கட்டிடத்தைத் திறக்க வந்தார்-அதுபற்றிய போஸ்டர் இல்லை-தோரணமில்லை-அய்யா வந்தார்கள் -கூடியிருந்த சாதாரண மக்களிடம் -'இதோ இது உங்களுக்காகத்தான் -நல்ல முறையில் பயன் படுத்துங்கள் ' என்று கூறிவிட்டு ரிப்பன் ஒன்றை கட் செய்து துவக்கி வைத்த எளிமையை மறக்கமுடியுமா?
ஒரு முறை ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொண்டி என்ற ஊரில் மூட்டா காம்ப் ஒன்றை நடத்தியது.அருமையான வகுப்புகள் நல்ல தோழர்களைக் கொண்டு நடத்தப்பட்டன.இரண்டாம் நாள் காலை அருகே பஸ் ஸ்டாண்டிலிருந்து மூத்த தலைவர் ஒருவரைக் கூட்டி வறுமாறு நான் பணிக்கப் பட்டேன்.உற்சாகத்துடன் நானும் சைக்கிளில் சென்று மதுரையிலிருந்து வந்த முதியவரை என் சைக்கிளில் வைத்துக் கூட்டிக்கொண்டு வந்தேன்--அவரது விருப்பப்படியே.அவர் மிகப்பெரிய விஷயங்களையெல்லாம் மிக எளிதாக விளக்கி மிகவும் எல்லோரையும் கவர்ந்து விட்டார்-அவர்தான் பெரிய படிப்பெல்லாம் படித்துவிட்டு,ஏராளமான சொத்துக்கள் எல்லாம் கடசிக்கு வழங்கிவிட்டு மிக சாதரணமாக எல்லோருக்கும் சேவை செய்துவந்த கம்யூனிஸ்ட் தலைவர்,மரியாதைக்குரிய திரு.கே.டி. கே .தங்கமணி அவர்கள்.இப்படியும் ஒருவர் இருக்கமுடியுமா என்று மிக மிக வியந்தேன்.அதைப் போல் பிறிதோர் காம்பில் உரை ஆற்ற வந்து வெகு நன்றாகப் பாடம் நடத்திய திரு.வி.பி. சிந்தனையும் என்னால் மறக்க இயலாது.அப்போது ஈழத்தமிழர்கள் பிரச்சினை நடந்துகொண்டிருந்த நேரம்.ஒரு குறிப்பிட்ட கதையைச் சொல்லிமுடிக்கயில் -எந்த நேரமும் குண்டு விழலாம் -என்கிற அளவுக்குத் தத்ரூபமாகப் பாடம் எடுத்த வி பி சி அவர்களையும் என்றும் மனதில் வைத்திருக்கிறேன்.இவர்களெல்லாமல்லவோ இந்த தேசத்திற்கு சாதித்தவர்கள்!
Madurai O madurai 21.

Comments

Popular posts from this blog