Madurai O madurai-(13).
அன்னை அங்கயற்கண்ணியை துதித்துத் துவங்குகிறேன்-கடவுள் வழிபாடு இல்லாமல் நானில்லை.'ஆலயம் செல்வது என் தந்தையர் காட்டிய வழி. பலநூறு முறை ஆலயங்கள் சென்றிருப்பேன் இதோ மதுரையின் மணியாய், மணியின் ஒளியாய் விளங்கும் ஆலவாய் அழகன் கைப்பற்றிய அன்னை மீனாட்சி கோயிலுக்குள் நுழைகிறோம்.
கிழக்கு கோபுரம் வழியே செல்வதே மரபு."பாலும் தெளிதேனும்" சொல்லி விநாயகனை-நின்ற கோலத்தில் நிற்கும் முழுமுதற்பொருளை-வணங்கி ,வலப்புறம் மயில்வாகனனாய் பன்னிரு கரங்களுடன் சுடர் முகம் கொண்டு அன்புருவம் தாங்கி நிற்கும் முருகனை வணங்கி மேலே நடக்கிறோம்-'சண்முகக் கடவுள் போற்றி' எனத்தொழுத்தவாறே.குறுகிய முகப்பு வாயிலைக் கடந்தால் சற்று விசாலமான இடத்தில -ஒரு பக்கம் பொம்மைக்கடைகள் ,இடப்பக்கம் நறுமணப் பூக்கள் கடைகளும்--அழகிய மாலைகள் வாங்கிக்கொண்டு-மீண்டும் குறுகிய வாயிலைத் தாண்டி சிறிதே இருபுறம் கண்களை சுழற்றி கடவுளர் சிலைகளை பார்த்தவாறே,மீண்டும் இடப்பக்கம் பிள்ளையாரையும்,வலப்புறம் சுப்ரமணியரையும் வணங்கி -சற்றே பெரிய பொற்றாமரைக்குளத்தையே அடக்கிய இடத்தில் இடப்புறம் திரும்பி, கர்ப்பகிரஹ விமானங்களைத் தரிசித்துவிட்டு -குளத்தின் தெற்குப் பக்கம் தெய்வப்புலவன் வள்ளுவரின் குறளமுதத்தைப் பருகியவாறே -படிகளில் இறங்கி-பொற்றாமரைகுளத் தண்ணீரை வைத்து கைகால் சுத்தம் செய்து ,தலையிலும் தெளித்துக்கொண்டு-சிவா சிவா எனச் செபித்தவாறே -மேலே வந்து-விபூதிப்பிள்ளையாரிடம் விபூதியைக் கொட்டி வணங்கி வலப்புறம் தாண்டி அன்னையரின் பிரதான வாயிலை - அற்புத சிலைகளை -பஞ்ச பாண்டவர்களையும்- மேலே பற்பல வண்ணங்களில் எழில்மிகு கோலங்களையும் கண்டு மகிழ்ந்து-அடைகிறோம்.
வேறெந்த சிந்தனையும் இல்லாமல் அம்மையை மனதில்பொருத்தி கலைநயமும் அருள்நயமும் கவித்துவமாயும் காட்சி தரும் ஆலயத்தில் வைக்கும் ஒவ்வொரு அடியும் ஆன்மிக பொக்கிஷமே! இப்போதெல்லாம் அதிகாலையிலேயே தரிசிக்க வருவதால் ஜனக்கூட்டங்களோ இரைச்சலோ இல்லாமல் இறைவனை எளிதே வணங்கும் பேறு கிட்டுகிறது.கொடிமரம் முன் வீழ்ந்து வணங்கி-அன்னையின் சன்னதிக்குள் நுழைகிறோம்-மிக வசதியாக நாம் வணங்கும் வகையில் வடிவமைத்த மேடை மேல் நகர்ந்து பார்போற்றும் பேரழகியை-மோகினியை-தாயைக் கண்டு அணு அணுவாக கூர்ந்து பார்க்கிறோம்-இரைந்து ஆதி சங்கரின் மீனாட்சி பஞ்ச ரத்தினம் சொல்லி -பிரிய மனமின்றி மீண்டும் மீண்டும் கண்டு இன்புற்று-ப்ரதிக்ஷணமாக வலம் வந்து-அடுத்த பிரகாரம் வழியாய் சிவனின் பெரிய பிரகாரத்தை அடைகிறோம்-
ஆஹா மிகப் பெரிய முக்குறுணிப் பிள்ளையாரின் தரிசன அனுபவம்.சற்றே நின்று அவ்வயாரின் அழகு அகவலைத் துதித்துப் பேருவகை அடைகிறோம்- கொஞ்சம் தள்ளி இடப்புறம் திரும்பினால் தூணொன்றில் அனுமன் காடசியளிக்கும் அழகு-அஞ்சிலே ஒன்று பெற்றான் -என்று துவங்கும் கம்பனின் துதியைச்சொல்லி ஆனந்தித்து-இடப்புறம் விநாயகரின் வடிவங்கள் தனித்தனி அறைகளில் அருள்பாலிக்க -சுந்தரேசர் சந்நிதிக்குள் நுழைகிறோம்.இடப்புறம் சென்று சூரியரைத் தரிசித்து ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி உளம் உருக-ஆலவாய் அழகன் திருவறைக்குள் செல்கிறோம்-அதோ நடராஜனை -பாதம் மாற்றி ஆடிய வெள்ளியம்பலம்-கண்கள் குளமாக -சிவலிங்கமாய் ஜொலிக்கும் பித்தனை-பிறை சூடிய பெருமானை போற்றியே வணங்கி மகிழ்கிறோம்.சிறிது இதயத்திலும் நாம் பெற்ற காட்சியைக் கண்டு வியந்துவிட்டு-வெளியே கீழிறங்கி வருகிறோம்
.எதிரே அம்மா சரஸ்வதியார்-என்ன அழகு! சிறிதே நடந்தால் சப்தமாதர்கள் -எதிரே அய்யாவின் வெளிப்புற சுவற்றில் சிலா ரூபத்தில் பேரொளியாய் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி-அப்படியே அமர்ந்து த்யானத்தில் ஆழ்ந்து தன்வயமிழக்கிறோம்.ஒரு பூரண சரணாகதிநிலையை -பேரமைதியை அடைந்து களிக்கிறோம்
அப்படியே எழுந்து அன்னை-அய்யாவின் உட்சவ மூர்த்திகளை பார்த்து வணங்கிவிட்டு வலம் வந்தால் சிவன் அடிமுடி காணமுடியா-லிங்கோத்பவர் தரிசனம்-எதிரே பல்வகை ஆறுமுகங்கள்--சற்றே தள்ளி -காசி விஸ்வநாதர்-விசாலாட்சி-வேறென்ன வேண்டும் மானிடப் பிறவிக்கு? திரும்பினால் சித்தர் சிலை-அடடா என்ன அற்புத வடிவமைப்பு-எதிரே ஸ்ரீ துர்க்கை.கண்கள் குளமாக இம்மூர்த்தங்களை வணங்கி , சண்டிகேஸ்வரை கைதட்டி வணங்கி- தாயார் ஸ்ரீ மஹாலக்ஷ்மி-'அம்மா எல்லோருக்கும் பொருள் வளம் அருள் என்று வேண்டி-வன்னி மரத்தை தாண்டி-சந்திர தரிசனம்.-மனது சற்றே அடங்கி நின்றது
.அப்படியே வெளியே வந்து இடப்புறம் பல்வகை அய்யன் முருக தரிசனம்.அலுக்காமல் சலிக்காமல் ஒரு குழந்தயைப் போல் நடந்து-நவக்கிரக சன்னதியில் கோளறு பதிகம் பாடி விளக்குகள் ஏற்றிவைத்து வணங்குகிறோம்.
பிரம்மாண்ட வடிவில் -நேர்த்தியான சிலை வடிவங்களில் -அக்கினி அகோர வீரபத்திரரைத் தரிசித்து-பத்திரகாளியை சேவித்து சிவா -பார்வதி திருமணக்கோலம்-உலகநாயகன் உடன் கண்டு பெருமிதம் அடைகிறோம்.அந்த மண்டபத்தில்தான் எத்தனை வேலைப்பாடு மிக்க சிற்பங்கள்.!நம் அறிவுக்கு எட்டா புராணங்களின் நாயகர்கள்.பலநாட்கள் நம் கனவிலும் காட்சியளிக்கும் எழில்மிகு திரு உருவங்கள்.
வெளியே வந்து நந்திபிரானை வணங்கி-மீண்டும் வலப்புறமாகச் சென்று ஆடிவீதி திருவலம் வந்து-கிழக்கு கோபுரத்தின் வாயில் வழியே திரும்புகிறோம்-நெஞ்சு நிறைய நிம்மதியுடனும் ,மடி நிறைய திருவருளுடனும்-'எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டி நடையைக் காட்டுகிறோம் இல்லம் நோக்கி.

Comments

Popular posts from this blog