மாந்தருக்கு அழகு சிந்தனை-ஊருக்கு அழகு ஆறு. மதுரைக்கு வைகை ஆறு அணி செய்யவில்லை ஏனெனில் எப்போதும் வறண்ட வைகையைத் தான் நாம் பார்த்திருக்கிறோம்,நானறிந்த வரை இந்த நிலை. ஆனால் நாங்கள் சிறு வயதில் ஆற்றில் குளித்த காலமும் இருந்தது. மழைக் காலங்களில் ஓடும் . வைகை கரை புரண்டு ஓடியதில்லை. 4 வருடங்களுக்கு ஒரு முறை - நான்கு முறை நாற்பது வருடத்தில் வெள்ளத்தைப்பார்த்து மிரண்டிருக்கிறேன்
.அறுபதுகளில் வந்த வெள்ளம் காரணமாக நான் படித்த முனிசிபல் பள்ளி -ராம ராயர் மண்டபம் அருகில் உள்ளது-பத்து நாட்கள் மூடிவிட்டனர்.இப்போதல்லாம் இருபுறமும் கற்கள் வைத்து நல்ல சாலைகளெல்லாம் போட்டு இருப்பது மிக பயனுள்ளதாக இருக்கிறது.
எழுபத்து இரண்டோ-மூன்றோ- ஒரு வெள்ளம் வந்தது-ஆடிப்போய் விட்டது மதுரை.கீழ்பாலம் (அப்படி ஒன்றே ஒன்றுதான் இருந்தது) மூழ்கி விட்டது-மேல்பாலத்திலும் செல்லத்தடை.பெரும் போராட்டமாகப்போய்விட்டது-ஆற்றில் மாட்டிக்கொண்டவர்களைக் காப்பாற்றுவது.ஒரு ஹெலிகாப்டர் வைத்து மாவட்ட நிர்வாகம் சிக்கியவர்களை ஆற்றிலிருந்து அமெரிக்கன் கல்லூரி மைதானம் வரைக் கொண்டு இறங்கிவிட்டது.ஆற்றின் இருபுறமும் ஆயிரக்கணணக்கான மக்கள் வெள்ளம்.ஆ ஆ ஓ ஓ என்று கூச்சலிட்டுக்கொண்டு தப்பியவர்களைப் பார்த்து எக்காளமிட்டுக் கொண்டிருந்தனர்.மூன்றாம் முறையாக ஹெலிகாப்டர் ஆற்றில் எதையோ பிடித்துக்கொண்டு தப்பிக்க முயன்ற பெண்ணுக்கு மேலே பறந்து கயிரைக் கீழே இறக்கி அவளைப் பிடிக்கவைத்து சற்று மேலே வந்தால் அந்தப்பெண்ணிடம் ஒட்டியிருந்த ஆடை தண்ணீரில் விழ-ஹோ ஹோ என்ற மக்கள் கூச்சல்வேறு- தமிழச்சியாயிற்றே -மானம் பெரிதன்றோ-கையை விட்டுவிட்டாள்-ஆற்றோடு அடித்துச் செல்லபட -ஹெலிகாப்டர் ஓட்டி மீண்டும் மீண்டும் அருகே சென்று அவள் சற்றே மேலே வர-மறுபடியும் ஆற்றில் விழ -விடாப்பிடியாக ஹெலிகாப்டர் தாழ்வாகப் பறந்து-அய்யகோ- ஆற்றின் விசையில் சிக்கிக் கொண்டு அதுவும் வெள்ளத்தோடு வேகவேகமாக வண்டியோட்டியோடு அடித்துச் செல்லப்பட்டது-அடிப்பாவி - விதி-அவரையும் கூட்டிபோய்விட்டதே என ஜனங்கள் கூக்குரலிட்டது இப்போதும் எனக்குள் ஒலிக்கிறது-அந்த வாகன ஓட்டி பெயர் குழந்தைவேலு என்று நியாபகம்-அடுத்த சிலமணியில் சடலமாகத்தான் எடுத்தார்கள்.அந்தப்பெண் ஏற்படுத்திய 'விதி' அது- ஆடையின்றி காடசி அளித்து-இந்த ஊர்வாயில் புகுந்து புறப்படுவதைக் காட்டிலும் கைப்பிடியை நழுவவிட்டு ஆற்றோடு சென்ற அந்தத்தமிழ்மகள் !-மீனாட்சி ஆளும் மதுரையில்தான் மகளிர்க்கு சோதனை!
அந்த சமயத்தில் தான் யானைக்கல் அருகே அந்த இடத்திற்குப் பெயராகி நின்றிருந்த யானை சிலைக்கும் சோதனை வந்தது-இரவோடு இரவாக யானைக்கல்லை எதிர்திசைக்குத் திருப்பிவைத்துவிட்டனர் ஒரு கும்பல்-அதுதான் வெள்ளம் வரக் காரணமாம்! சிலநாட்களில் வேறொரு கும்பல் அதை பழையபடி மாற்றிவைத்த கூத்தும் நடந்தது-மதுரை ஜனங்கள் எப்போதும் உற்சாகமாகவே ஏதோ செய்துகொண்டு வேடிக்கையாய் காலம் கழிப்பர்.வெள்ளந்தி மக்கள்தான் -அனால் வெகுண்டால் சீறிப்பாய்ந்து விடுவார்.
தொண்ணுற்று மூன்றிலோ என்னோவோ நான் பார்த்த வெள்ளம் --மிகப்பொல்லாதது-ஷெனாய்நகரினுள் நடக்கமுடியவில்லை-குருவிக்காரன் சாலையெல்லாம் இடுப்பளவு-அப்போது நம் அறிவொளித்தொண்டர்கள் மாநகர ஆணையர் டேவிதார் அய்யாவுக்கு உதவியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.மதுரைக்கும் வைகைக்கும் இத்தகைய நட்பு- வைகை மட்டும் ஓடினால், அடடா எவ்வளவு அற்புதமான நகரமாக மாறியிருக்கும்-இன்றைக்கு மாநகராட்சி கட்டி இருந்த இடம்தான் தல்லாகுளம்..நல்ல வேளை- வைகயையும் ஆக்ரமித்து நதியையே விற்று விடாமல் பார்த்துக்கொண்டனர் மதுரை வாசிகள்.
madurai o madurai(10).

Comments

Popular posts from this blog