அந்தக்கால மதுரையைக் கருப்பு வெள்ளைப் படங்களில் காண்பிக்க வருமுன் நாங்க கோபுரங்களைத் தான் காட்டுவார்கள்.கண்ணதாசன் -பட்டுக்கோட்டையார் பாடல்களும் மதுரைத் திருவிழாக்களும் மனதெல்லாம் நிரம்பி  இன்றும்கூட மதுரையின் மகத்துவம் ஒளிர்ந்துகொண்டே இருப்பது ஒவ்வொரு ஊர்க் காரர்களுக்கும் அவரவரது ஊர் நினைவுகளில் கிடைக்கும்.மதுரையில் பல இடங்களும் இன்றும் என்றும்போல் பசுமையாக மனக்கண்ணில் தெரிகின்றன-
    புட்டுத்தோப்பு என்றோர் இடம்-அங்குதான் ஆண்டுதோறும் ஈசன் பிரம்படி வாங்கும் இடம்-ப்ரசாதமாகப் புட்டு கிடைக்கும் -மதுரையில் எல்லார் வீட்டிலும் அது உண்டு. கோயில்நடையைச் சாத்திவிடுவார். பக்தர்களுக்கு ஏற்படும் சிலிர்ப்பு பக்தனுக்குத்தான் புரியும்.எத்தனையோ நூற்றுக் கணக்கான வருடங்களாக நடைபெற்றுவரும் இந்த நிகழ்வு  எத்தனை அர்த்தமுடையது-'பிட்டுக்கு மண் சுமந்த பெருமானே-பிரம்படியும் பட்ட கோமானே' என்று உள்ளம் உவகை கொள்ளும் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போது.

  மதுரையைக் 'கந்தக பூமி' என்று  அதன் வெப்பம் தாளாமல் சொல்வர். கோடையில் வைகை ஆற்றின் படுக்கையில் பல நீரூற்றுகள் தோண்டி-பத்தே பைசாவுக்கு பல வாளிகள் எடுத்துக் குளிக்கும் வசதி இருந்தது.அந்தக் கோடையில் அப்படி அங்கே போய் வீட்டுக்குத் தெரியாமல் பல நாட்கள் குளித்திருக்கிறோம்.கூட்டிப் போகும் வீட்டுப் பணி செய்பவர் முத்து  என்பவர்  சொல்லும் கதைகளில் வரும் 'சுக்குமாந்தடி' போல் ஒரு கம்பு மட்டும் கிடைக்கவேண்டும்-அநியாயம் செய்வோரை வெளுத்துவிடலாம் '-என்றெல்லாம் நினைப்போம்.வாழ்க்கையும் கதையாவது இப்போதல்லவா புரிய வருகிறது.

வீட்டுக்கருகே மதிச்சியம் பொட்டலில் சைக்கிள் ஒன்றில் இடைவிடாமல் மூன்றுநாட்கள் .நான்கு நாட்கள் என்று யாரோ ஒரு வீரர் சுற்றி சுற்றி இடை விடாது சாதனை புரியும் காட்சிகளும்  அவ்வப் பொது அரங்கேறும். பாடல் ஒலிக்கும்-சைக்கிளிவீரர் சுற்றிக்கொண்டே குளிப்பார் -ஆடைமாற்றுவார்-உணவு சாப்பிடுவார்.ஏதோ இனந்தெரியாத பரிவு அவர்பால் ஏற்படும்.அவர் வைத்துள்ள உண்டியலில் வீட்டில் கேட்டு வாங்கிவந்த ஐந்து பைசாவைப் போடும் ஆனந்தமே தனி.

அதேபோல் மதுரையில் அப்போதெல்லாம் சர்க்கஸ் மிகவும் ப்ரசித்திபெற்றது. ஜெமினி ரொம்ப ரொம்பப் பாப்புலர்.அரசரடியிலோ, தமுக்கத்திலோ, அல்லது சில வருடங்கள் மதுரைக் கல்லூரி மைதானத்திலோ தவறாமல் சென்று பார்த்துவிடுவோம்.தந்தையார் கால்நடை அதிகாரி என்பதால் எங்களுக்கு -பாக்ஸ் டிக்கெட் -இலவசமாக.நன்றாகவேதான் இருக்கும் நிகழ்ச்சிகளும், கோமாளிகள் செய்யும் கூத்துக்களும்.

 தமுக்கத்தில் அதேபோல் வருடா வருடம் மல்யுத்த நிகழ்ச்சிகளும் நிகழும். தாராசிங் , கிங்காங் , ரந்தவா  போன்ற மாபெரும் வீரர்கள் மோதும் அற்புதக் காட்சிகள் மதுரைக்காரர்களுக்கு பெரிய விருந்து. அவ்வீரர்கள் காலைவேளைகளில் தல்லாகுளம் அருகே நடந்துகொண்டே சில கடைகளில் சாப்பிடுவதைக் காணவே நாங்கள் வகுப்புகளை மறந்து கூட்டம் கூட்டமாக அவர்கள்பின் செல்வோம்.
தமுக்கத்தில்தான் சித்திரைப் பொருட்காடசியும் கோடையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை ஒட்டி இரு மாதங்கள் நடைபெறும். கூட்டம் நிரம்பி வழியும். அந்தக்கால காதலர்கள் பாட்டுக்கள் கேட்கவே இந்தக் கால இளசுகள் அங்குமிங்கும் உலாவிவருவது கண் கொல்லாக காட்சி.

மதுரை பழமைக்குப் பழமை-புதுமைக்கும் புதுமை தான்!

மதுரை ஓ மதூரை 27.

Comments

Popular posts from this blog