சிறையென்  செய்யும்?

மதுரை அரசரடி -ஆரப்பாளையம் சந்திப்பருகே நியூ ஜெயில் சாலையில் உயர்த்த மதில்களுடன் காட்சி அளிப்பதே  மதுரை சென்ட்ரல் ஜெயில்.கனவு கூடக் கண்டதில்லை அங்கே தங்கியும்  வாழ்க்கையில் புதிய அனுபவங்களைப் பெறமுடியும் என்று.22 நாட்கள் ஒரு முறை, 10 நாட்கள் ஒருமுறை 4 நாட்கள் ஒருமுறை-இதைத்தவிர எண்ணற்ற நாட்கள் ஒருநாள் காவல்-எனக்கு காராக்கிரஹம் ! கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு அருகே போராட்டம் என்று வந்து பார்த்தால் போலீசார் அங்குகூடும் ஆசிரியர்களை விரட்டிக்கொண்டிருந்தார்கள்.ஏன் முறைப்படி அனுமதிபெற்றுத் தானே இந்த அறப்போரை நடத்துகிறோம்-என்ன ஆயிற்று என்று யோசித்தால் மோகன் கல்யாணசுந்தரம் -'ஸ்ரீ-ஏற்கனவே கூடிய நம்ம ஆட்களைக் கைது செய்து கொண்டு போய்ட்டாங்க -அநேகமா ஜெயிலுக்குத் தான்" என்கிறார். நல்ல அறிவுஜீவி-பழகுவதுற்கு இனிமையானவர். தியாகராஜர் கல்லூரியில் எனக்குச் சீனியர்.அப்போதே ஸ்டாலின், டிராட்ஸ்கி.லெனின் எல்லோரையும் நிரம்பப் படித்தவர்-ஆனால் அடக்கமானவர். வாடா போடா என்று  நட்போடு பேசிக்கொள்வோம்.."அதனாலென்ன -வா நம்ம எல்லோரும் போகலாம்"என்றேன்-மேலும் சிலர் சேர்ந்தனர்-விளக்க எத்தனித்த சிலரை விடாது அனத்தியும்  18  (காய்கறி வாங்க ,மருந்து வாங்கவந்த ,வேடிக்கை பார்க்கவந்த பலர் இதில் அடக்கம்!)பேரைச் சேர்த்தோம்-காவலர்கள்  விரட்ட நாங்கள் கோஷங்கள் முழக்கி பொதுமக்களும் கூட ---போலீஸ் வேனில் ஏற்றி நீதிமன்றத்தில்  ஆஜர் செய்து நீதிபதியிடம் போராட்டத்தில் பங்கேற்கிறோம் என்று சொல்லி மதுரை சிறைச்சாலைக்குள் நுழையும்போது மாலை ஆறுக்கு மேல்.

அங்க அடையாளமெல்லாம் குறித்துக் கொண்டு சிறையினுள் நுழைந்தபோது மாலை உணவு முடிந்திருந்தாலும் எங்களுக்காக எதோ காவலர் அன்போடு வாங்கிவந்த இட்லியைச் சாப்பிட்டோம்.காவலர்கள் எங்கள்மீது எப்போதும் வன்மம் கொண்டு நடந்ததில்லை.நாங்களெல்லாம் பேராசிரியர்கள் வேறு.   சிறையில் தான் பத்து அல்லது இருபது  பேர் தங்கக் கூடிய பெரிய அறைகள் -வெளியே கழிப்பறைகள் வரிசையாக சிறிய சிறிய தடுப்புச் சுவருடன்-ஆனால் கதவு  இருக்காது!--அருகே வெட்டவெளியில் பெரிய சிமெண்ட் டப்பில் குளிக்கத்  தண்ணீர்.

அன்றிரவே  எல்லோரும் எப்படியோ கூடினோம் -9 மணிக்குமேல் விடவில்லை-ஏற்கனவே உள்ள வந்திருந்த பெரிய 'தலைகளெல்லாம்' இருக்கையில் எங்களுக்கென்ன பயம் ?.நன்றாகத்தூங்கினோம்.
காலையில் தோசையும் சட்னியும்-பசிக்குச் சாப்பிடலாம்-டேஸ்ட் இருக்காது.மறுபடியும் கூடினோம்,பேசினோம்-மதிய உணவு-சோறு-சாம்பார்-காய்கறியுடன்-மோர் :பசிக்கு நன்றாக இருக்கும்-அப்புறம் சிறையில் இது கிடைத்ததே அற்புதம் என்று தோன்றிவிடும்.

நாளாவட்டத்தில் நுற்றுக்கணக்கில் நண்பர்கள் சேர எங்கள்  வாழ்க்கை ஜெ ஜெ என்று மாறிப் போனது.அரசு பிடிவாதமாய் இருந்தது. அனால் தீபாவளி அன்று நம்மை உள்ளே வைக்க மாட்டார்கள் என்ற தப்புக்கணக்கு  தவறியது-கொஞ்சம் நண்பர்கள் பிள்ளைகுட்டிகளை நம்பிக் கண் கலங்கினர்.

என்னுடைய இன்னொரு பக்கம் -தீவிரக் கடவுள் பக்தி.எனவே நேரம்கிடைத்தபோதெல்லாம் ஜெயிலினுள்ளும் த்யானம் செய்வேன் -சிலருக்குமட்டும்  தெரியும் .உள்ளேயே கூட பிள்ளையார் இருந்தார்-அங்கும் போய் கொஞ்சம் முறையீடு!சிலபல ஸ்லோகங்கள் ! நிறைய விவாதம், பட்டிமன்றம், பேச்சுக்கள்-அது ஓர் வித்தியாசமான அனுபவமே. எதோ ஒரு டவர் மீது பெருமாள் பாதம் கண்ணில் பட்டது.காலையில் அங்கு சிறிதுநேரம் கழிப்பேன்.அப்புறம் புத்தகங்கள் ,வேறென்னவேண்டும்.
   தீபாவளி தாண்டி வெளியே போராட்டம் வலுப்பெற்று தினமும்  ஆயிரக்கணக்கில் வர ஆரம்பித்து மூச்சு முட்டியது.ஒருமுறை தனி அறைகளில் அடைக்கப் பட்ட ஆயுட் கைதிகளை பார்த்து பேசி வருவோம் .அப்போது திடீரென ஒருகைதியை உள்ளே இருந்தத  காவலர் அறையில் போலீசார் அடித்துநொறுக்கப் பெருங்குரலில் கைதிகள் கதற-இதைப்பார்த்து ஆவேசமாய் நான் பெருங்குரலில்  காவலரை எதிர்த்து முழக்கம் எழுப்ப -என்னைச் சமாதானப் படுத்தி நண்பர்கள் கூட்டிச் சென்றனர்.எல்லோருக்கும் மூன்று வேளையும் சாம்பார் ஊற்றும் வழக்கத்தை செய்ததால் என் கோபம் கட்டுப் பாட்டில் இருந்தது....
அருமையான நட்புகள் கிடைத்தனர். குடும்ப உறவின் மேன்மையும் புரிந்தது-என்னைப்  பார்க்க வந்த நாலுவயது மகள் என் தாடியைப் பார்த்து வர மறுத்தாள் --ஆனால்ஜெயிலுக்குப் போய் தாடியில்லையெனில் சிறை வாழ்கைக்குப் பொருளென்ன?

மதுரை ஓ மதுரை 23.

Comments

Popular posts from this blog