மாத நாவல்கள் தமிழிலும் வெளிவருகின்ற காலம் அது.கேட்கவேண்டுமா உற்சாகத்திற்கு?எத்தனை நூல்கள் படித்து மகிழ்ந்திருப்போம்-அவைகளை பற்றி பேசுவோம் -அவைகளில் வருவோர் போவோரை எண்ணி வருந்தியுமிருப்போம்?பள்ளி,கல்லூரிகளை மூடிவிட்டால் போதும் ,உடனே படித்தபுத்தகங்களை சிறிதுசிறிதாக எடுத்துக் கொண்டு நியூ சினிமா அருகில் உள்ள பழைய புத்தகக்கடைகளுக்குச் சென்று ,மல்லுக்கட்டிப் பேரம் பேசி பணத்தை வாங்கித் தான் சினிமா பார...்ப்போம்-சித்திரைப் பொருட்காட்சிக்குப் போய் ஜெயண்ட் வீலில் சுற்றுவோம். நியூ சினிமா அருகே செல்லப் பஸ் எல்லாம் பிடித்துக் கஷ்டப் படமாட்டோம்-வீட்டுக்குப் பின் நடந்துபோய் ஆற்றில் இறங்கிச் சிந்தாமணிக்குப் பின்புறம் படித்துறையில் ஏறி-அப்படியே-மீனாட்சி கோயில் வந்து-பழையபுத்தகக் கடையை அடைந்து விடுவோம்.மதுரையை அப்படிப் பலநாட்கள் வலம் வந்திருக்கிறோம். அதேபோல் வீட்டில் எனக்கு அடுத்துப்பிறந்து வளர்ந்த விஜி, சங்கர், பவானி எல்லோரையும் சினிமாவுக்கு அழைத்துப் போகும் அபூர்வ வாய்ப்புகளையும் விடமாட்டேன்-மணி கொஞ்சம் சொகுசுப் பேர்வழி-கிருஷ்ணா -"நீ கூட்டிப் போய்ட்டுவா '" -என்று உத்தரவு போட்டுவிடுவான்.ஒருமுறை அப்படித் தான் ரயில்நிலையத்தில் 3 ம் no.பஸ்சில் ஏறி-இறங்கி--சென்ட்ரல் சினிமாவில் நடந்த ஆயிரத்தில் ஒருவன் சினிமாவுக்குக் கூட்டிச் சென்றேன்.ஓட்டமும் நடையுமாக மாட்னி ஷோ பார்க்கத் துவங்க நடக்கலானோம்- டவுன் ஹால் ரோடு இடப்புறம் துணியில் சுற்றப்பட்ட வளையல் பெட்டி ஒன்றில் காலைவைத்துவிட்டேன்-அவ்வளவு தான்-சிலீரென்ற சத்தத்தோடு -பெட்டியின் கண்ணாடிக் கதவு -உடைய-அருகிலிருந்து ஓடி வந்த வளையல் பெட்டிக் கடைக்காரன் எனது சட்டையைப் பிடித்துவிட்டான்-மிரட்டவும் ஆரம்பித்துவிட்டான்.பணத்தைக் கொடுத்துவிட்டுப் போகச் சொல்லி.குழந்தைகள் எல்லாம் அழ ஆரம்பிக்க-என் கெஞ்சலை எல்லாம் பொருட்படுத்தாமல் அவன் என்னிடம் பணம் வாங்குவதிலேயே குறியாய் இருந்தான். நல்லவேளையாக அந்தப் பக்கம் வந்த மெடிக்கல் கல்லூரியில் படித்த அண்ணா நண்பர் Dr . சத்தியவான் வந்து கடைக் காரரிடமிருந்து எங்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார். ஆனாலும் படத்திற்கு வந்தபிறகும்-நாங்கள் எல்லாம் தலைகளை கவிழ்த்துக் கொள்வோம் -ஒவ்வொருமுறையும் கதவின் ஸ்க்ரீன் விலகி எவரேனும் வந்துபோனால்கூட-அவ்வளவு பயம் அந்த வளையல் கடைக் காரன் மீது! இதேபோலவே எனது அத்திம்பேர் ராஜாராமின் உடையை அயர்ன் பண்ணிக் கொடுக்க டிலே செய்த ஒரு வயதான பெரியவரை நான் ஏதோ மரியாதைக்குறைவாகப் பேசி அவர் என்னைப் பிடித்து வைத்துவிட்டார் கடைக்குள்-அண்ணன் சேகர் வந்துதான் காப்பாற்றவேண்டிஇருந்தது! நியூ சினிமாவில் ரிக்ஷாகாரன் படம் பார்க்கப் போய்-கூட்டத்தைக் கண்டு மிரளாமல் நானே டி ஐ ஜி ஒருவர் பையன் ஆக 'உருமாறி-' நண்பர்களுடன் படம் முடியும் வரை திக் திக் என்று படம் பார்த்ததை மறக்கமுடியுமா? அதே நியூ சினிமாவின் முன் தாயில்லாமல் நானில்லை படம் ஆருயிர் நண்பன் ஜெயராமனுடன் பார்க்கப்போய்-எவனோ வம்புக்கிழுக்க-அவனோடு கட்டிபுரண்டுச் சண்டைபோட்டு வெற்றியுடன்-housefull போர்ட் வரவேற்றாலும்-கமல் நற்பணி அன்பர்கள் 'நன்றாகச் சண்டை போட்டீர்கள்' என்று டிக்கெட் கொடுத்துப் படம் பார்த்ததை மறப்போமா?சிங்கம் ஆதிமூலம் என்ற மாஸ்டர் இடம் அமெரிக்கன் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள்
கராத்தே பயிற்சிபெற்றது வீண் போகலாமா?

என் தந்தையார் ஒரு விடுமுறைக்கு 4 நாட்கள் இருந்துவிட்டு வரும்படி-விருதுநகருக்கு-எனது சித்தப்பா வீட்டிற்கு அனுப்பிவைத்தார்.மிகவும் எக்ஸைட் ஆகிவிட்டோம்.அவர் அந்த ஊர் ஸ்டேஷன் மாஸ்டர்.ரயில்வேயிலேயே குடியிருப்பும்.ஊரேயெல்லாம் ஒரே நாளில் பார்த்தாகிவிட்டது.ஸ்டேஷனில் நடைபயில்வது தவிர பெரிதாக எதுவும் செய்யவில்லை-அன்புடன் சித்தி போட்ட பலாமுசுக் கறியுடன் சேர்ந்த சாப்பாடும் மீண்டும் மீண்டும் போட்டுத் தாக்க மதுரைக்கு மனம் ஏங்கி ஓடியே வந்துவிட்டோம் இரண்டாம் நாளே.மதுரையைச் சுற்றி வருவதே பெரிய சுகமான அனுபவம்-பின்னர் சென்னை முதல் எல்லா ஊரையும் பார்த்தாகிவிட்டது-ஆனால் மதுரையின் யவ்வனமும் நவீனமும் பழமையும் எந்த ஊருக்கும் வராது.

madurai O madurai

Comments

Popular posts from this blog