நற்குணத்துடன் வாழ்ந்தோர் உயிர்பிரியும் போது
தங்கள் ஜீவனிடத்தில் மெல்லச் சொல்லி விடைபெறுவர்
அப்போது வருத்தமுறும் நண்பர் சிலர் சொல்வர் -
"மூச்சு இப்போது நின்றது"- "இல்லை,இல்லை"-வேறு சிலர்.

அதுபோல் நாம் உருகி மறைவோம் -சப்தம் ஏதுமின்றி-
மடைவெள்ளமெனக் கண்ணீரோ-பெருமூச்சுப் புயலோ இன்றி-...
நமது இன்பத்தைக் கொச்சைப் படுத்துவதே -காதலியிடம்
நம் அன்பையெல்லாம்பற்றி வெளிப்படையாகச் சொல்வது

பூமியின் அதிர்ச்சி என்றும் தீங்கையும் துன்பமும் தரும்
மானிடர்க்குப் புலப்படும் அதன் செயலும் பொருளும்
பிரபஞ்சத்தில் இன்னும்பெரிய கோள்கள் அதிர்வோ-
ஏன் எந்தத் தீங்கும் நமக்கு உணர்த்துவதில்லையே

மந்தமான மதி படைத்தோர் காதலெல்லாம் என்றும்
பிரிவைப் பொறுப்பதில்லை -அவர்கள் ஆத்மா உடலிலே-
பிரிவு அவர்களை இணைத்து வைத்த உடல்களைப்
பிரிப்பது -எத்தகைய கொடுமையானது அவர்களுக்கு!

நமது அன்பும் காதலும் பண்பட்டது-உயர்ந்தது
நமக்கே அது சரியாகத் தெரியாது -புலப்படாதது
நமக்குள்ளே நம் இதயத்தினுள் உறுதி செய்யப்பட்டது
நம் கண்களோ-உதடுகளோ -கரங்களோ பற்றியதன்று

நமது இரு ஜீவன்களும் அதனால் எப்போதும் ஒன்றே-
நான் பிரியநேர்ந்தாலும் பிளவு ஏதும் தெரியாது நமக்குள்
அப்போது நிகழ்வதெல்லாம் இணைப்பின் நீட்சியே -
எப்படிப் பொன்னை உருக்கி மாலையாய் மீட்கிறாரோ

இருவருமெனில் என்றும் இருவராகவே இருப்போம்
எப்படி இருமுனைகள் கொண்ட காம்பஸ் போல்
உனது ஜீவனே நிலைத்து நடுவில் அசையாமல் நிற்கும்
எனினும் நகரும் -இனொரு முனை சற்றே அசைந்தாலும்

மையத்தில் நீ இப்படி ஒருமுனையால் நின்றிருக்க
இன்னொருமுனை எங்கேயும் தொலைவில்கூட -
எனினும் உன்னையே சார்ந்து உன்னையே கவனித்தும்-
அருகில் வர வரவும் நிமிர்ந்தே மகிழ்ந்திருக்கும் !

அப்படித் தான் எனக்கு நீ இருப்பாய்-அந்த முனைபோல்
எப்படி வந்தாலும் என்னிடம் சாய்ந்தும் பிரியாமலும்
உன் திண்மையான உறுதி என் வட்டத்தைப்பூர்த்தி செய்ய
எங்கிருந்து துவங்கினேனோ அங்கே வந்து முடிவுருவேன்!

Based on John Donne's A Valediction : Forbidding Mourning..

Comments

Popular posts from this blog