அதோ அவளைப் பார்-ஒற்றையாக வயல்காட்டில்-
தன்னந் தனியே பணிபுரியும் மேட்டுநில மங்கை-
அறுவடை செய்துகொண்டு -தனக்குளே பாடிக்கொண்டும் !
சற்றேபொறு-அன்றி மெல்ல மெல்ல நடக்கலாம்
ஒரு ஆளாகவே கதிரறுத்தும்-கட்டி வைத்தும்
சோகப்பாட்டு ஒன்றை ஏகாந்தமாய்ப் பாடியும்!
ஓ கவனி-இவ்வகன்ற பள்ளத்தாக்கு முழுவதும்
அவளது பாட்டுதான் நிரம்பி வழிகிறதே!
அராபியப் பாலைவனத்தின் நிழல் தரும்சோலைகளில்
தங்கவரும் பயணியரிடை இப்படி ஓர் பாட்டை
எந்த ஒரு இரவுப் பறவையும் இசைத்திருக்குமா?
உலுக்கவைக்கும் இக்குரலினிமைபோல் -
ஹெப்ராய்ட்ஸ் தொலைத்தீவுகள் கடலோசையை விஞ்சி -
வசந்த காலத்திலும் எந்தக் குயிலும்
கூடப் பாடியிருக்க இயலாது!
எவரேனும் சொல்லமுடியுமா என்ன அந்தப்பாட்டு என?
கடந்தகால பழமையான நிகழ்வுகளா?
யுத்தங்களா--அவளது துன்பகீதம் ?
இன்றும்கூட நடக்கும் நமக்குத் தெரிந்த
சங்கதிகளை சிறு பாட்டாக இசைக்கிறாளோ?
ஏதேனும் இயற்கைப்பேரிடரோ-துன்பமோ,வலியோ?
ஒருகாலத்தில் நடந்ததோ-மீண்டும் நடக்க இருப்பதோ?
என்ன கருப்பொருளோ-அக்கன்னியின் பாட்டில்?
அவள் பாடப் பாட முடிவற்றே ஒலித்தது-
பணியினிடையும் கதிரறுக்கையிலும்
பாடிய அவள் பாட்டில் அசையா சிலையாய் நின்றேன்-
மீண்டும் மலைமீதேறி நடந்திடும்போதும்
நெஞ்சமெல்லாம் படர்ந்தது அவ்வினிய இசை-
வெகு காலம் ஒலித்து ஒலித்தும் ஓயவில்லை!
Based on The Solitary Reaper by William Wordsworth.

உலகமே ஓர் நாடகமேடை-ஆண்,பெண் -அனைவரும் நல்ல நடிகர்களே!
அனைவரும் சென்றுகொண்டும் வந்துகொண்டும் இருப்பார்கள் -
ஒவ்வொருவரும் பலபலப்பாத்திரங்களில் நடிப்பவர்கள்தாம்!
ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஏழு பகுதிகளாக இருக்கும்-
முதன் முதலில்-குழந்தையாக-அழுதும் சிணுங்கியும்
செவிலியர் கரங்களில்-அடுத்து அடம்பிடிக்கும் பள்ளிச் சிறுவனாக-
கையில் புத்தகப் பையுடன் பால்வடியும் முகத்துடன்-
பள்ளிக்கு வேண்டாவெறுப்புடன் நத்தைபோல் ஊர்ந்து செல்வான்,
அடுத்துக் காதலனாக-ஊது உலைபோன்று பெருமூச்சுக்களை
விட்டுக்கொண்டும்-காதலியின் முக எழிலைக் குறித்துக் கவிதை எழுதியும் -
நான்காம் பகுதியில் வீரனாகப் பரிணமித்து-வாய் நிறைய வீர வசனத்துடன்-
சிறுத்தையின் தாடியோடு-எப்போதும் தனது மானத்தைக் காப்பதில் குறியாக-
குமிழ்போல் உடையும் புகழுக்காகப் போர்க்களத்தில் பீரங்கிகளுக்குமுன்
தனது வாழ்க்கையையே பணயம் வைக்கும் நிலையில்!
ஐந்தாவது பகுதியில் ஒரு நீதிபதி நிலையில்-லஞ்சலாவண்யத்தை அடையாளம் காட்டும்
தொந்தி தொப்பையுடனும்-கண்களில் கடுமையை வரவழைத்தும்-நன்கு வெட்டிய தாடியுடனும்-
அறிவாழம் மிக்கச் சொற்களுடனும்-சமீபத்திய சம்பவங்களை சுட்டிக்காட்டிக்கொண்டும் ஓர் வேஷம்!
ஆறாவதாக -வயதானவனாய்--உடல் மெலிந்தும் சாதா செருப்புடன்--
முகத்தில் கண்ணாடியும் அருகே பணப்பையுடனும்-
இளமையில் இருந்தகாலுறை தளர்ந்துபோய் -பாவம்-
கம்பீரமாய் ஒலித்த அவன் குரல் சிசுவின் கீச்சிடும் குரலாக மாறி!
வாழ்க்கை நாடகத்தில்-விந்தையான பல நிகழ்ச்சிகளாலான வரலாற்றில்-கடைசிக் காட்சியில்
நம் கதாநாயகன் நுழைவதோ-மறதியில் மயங்கி-இரண்டாம் கைப்பிள்ளைபோல்-
பற்களின்றி-பார்வையின்றி-சுவையுமின்றி-ஏதுமின்றி-அய்யகோ!
Based on As You Like It-of Shakespeare.


Comments

Popular posts from this blog