நானாகவே இருக்கிறேன்...


என்ன செய்தும் அந்த சிந்தனை அவனை விடவில்லை .ஜெயமோகன் கதைகளை  எடுத்தான், படித்தான் -மனம் ஒட்டவில்லை. லதாவின் பழைய பாடல்களைக் கேட்டான்;  கேட்டு முடித்தபின் மீண்டும் அதே எண்ணம் .வெளியே காலாற நடந்து தெருக்கோடி வரை நடந்தான்-அது நீண்ட வீதி. முனையில் நன்கு சாலைகள் சந்திப்பு.திரும்ப வீட்டுக்குள் நுழைந்தான் .சற்றே மனம் லேசாகிவிட்டது. அப்பாடா என்று  ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக்கொண்டிருந்தான் .

அதென்ன இவ்வளவுப் பூக்கள், மஞ்சளும் சிகப்பும் வெள்ளைக் கலரில்.என்ன அழகான தோட்டம் , எப்படிவந்தேன் இங்கு ? பறந்து வந்தேனா என்ன-வழியெல்லாம் மேகக்  கூட்டங்கள்-எதிலும் உரசல் வேறு இல்லாமல்..சிரிப்பாக வந்தது.ஏன் இங்கு ஒருவருமே இல்லை. எவ்வளவு அழகான நீரூற்று. அந்தி வானமும் -பிறை நிலவும் கூட. ஏதேதோ மந்திரங்கள் அவனைச் சுற்றிச்  சுற்றி வந்து எல்லையில்லாமல்
பிரசாந்தி நிலையை ஏறக்குறைய அடைந்து விட்டான். கையசைப்பில் அவனுக்கு உணவு கிடைத்தது -விதம் விதமாக-நல்ல பழச் சாறு -தேவாமிர்தம் இதானோ?
 ஒருதூக்கம் போடத் தோன்றியது.உடனே தூங்கி யும் போனான்.
எழுந்தால்  அவனுக்கே நம்பமுடியவில்லை-நிறைய ஜனங்கள் அங்குமிங்கும் நடந்துகொண்டு- விடிந்துபோய் சூர்யன் இன்னும் சாந்தமாக கதிர்களை பரப்பி- அடடா-வீட்டுக்குப் போகாமல் என்ற நினைப்பு வர -மீண்டும் நடக்கத் துவங்கினான்.

என்ன வாகனம் அது -சரியாக நினைவில்லை-ஏறினான் , இறங்கினான் வீட்டாண்டை.தெருவே அவனை வேடிக்கை பார்த்தது. ஒவ்வொருவராக அவனிடம் வந்து அவரவர் பிரச்னைகளைச் சொல்லி அவன் சொல்லும் வழிவகைகளைக் கேட்டுத் திருப்தியோடு விடைபெற்றுச் சென்றார்கள்.

நானும் ரொம்பப் பிரபலமாகிவிட்டேனே-இதற்குத் தான் இத்தனைக் காலம் ஏங்கித் திரிந்தேனா?
கையை அசைத்து சூடாக் காபி ஒன்று வரவழைக்க முற்பட்டான் .வரவில்லை இம்முறை. கோபம் மெல்ல எட்டிப் பார்க்க மீண்டும் ஒருமுறை சற்றே வேகமாக சுழற்ற -இம்முறைச் சங்கிலியில் கைபட்டுத் தொப்பென்று விழுந்தான் தரையில்.."ஐயோ என்ன இது நல்ல வேளை -அடி  கிடி படவில்லையே "?-ஓடிவந்து உதவினாள் அவன் தர்ம பத்தினி.  இந்த எண்ணமெல்லாம் இனிவேண்டாம் -எழுதி என்ன ஆகப் போகிறது-நல்ல வேளை -இத்தோடுபோயிற்று- ஆண்டவனே என்னை நானாகவே இருக்கவிடு -என்று ஏங்கியவாறு அமைதியாகத் தனக்குள்ள பணிகளை செய்யலானான் அவன்.

Comments

Popular posts from this blog